புதுடில்லி : வட இந்தியாவில் மவுனி அமாவாசை என அழைப்படும் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு உ.பி.,யின் பிரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று (பிப்.,04) 3 கோடி பேர் வரை புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.உ.பி.,யின் பிரயாக்ராஜில் ஜனவரி 15 ம் தேதி மகர சங்கராந்தி அன்று துவங்கிய கும்பமேளா தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறுகிறது. இதில் நாள்தோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த லட்ச கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கும்பமேளாவில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் தை அமாவாசையான இன்று 3 கோடி பேர் வரை புனித நீராட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கும்பமேளாவில் புனித நீராட வரும் பக்தர்களால் ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட்களில் கூட்டம் அலை மோதுகிறது. கும்பமேளாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக 500 க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மிக அதிக அளவிலான மக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 440 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, ஒட்டுமொத்த கும்பமேளா பகுதியும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.