உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி கோவில் மூன்று கிரீடங்கள் மாயம்

திருப்பதி கோவில் மூன்று கிரீடங்கள் மாயம்

திருப்பதி: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் உற்சவமூர்த்திகளின் மூன்று கிரீடங்கள் மாயமானது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரசித்தி பெற்ற திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான, கோவிந்தராஜ சுவாமி கோவிலில், உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கும் மூன்று கிரீடங்கள் காணமால் போனது, நேற்று முன்தினம் தெரிய வந்தது. தகவல் அறிந்த, திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், கோவிந்தராஜ சுவாமி கோவிலுக்கு வந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், ஊழியர்கள், பொறுப்பு அதிகாரிகளிடமும், விடிய விடிய விசாரணை நடந்தது. நேற்று பகலிலும், இந்த விசாரணை தொடர்ந்தது.மேலும், காணாமல் போன பொருட்களை கண்டறியும், போலீஸ் சிறப்பு படையும், கோவிலில் ஆய்வு நடத்தி வருகிறது. ஆய்வு முடிந்த பின், இதுபற்றிய முழுமையான விபரங்கள் தெரிய வரும்.

இதேபோல், தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோதண்டராம சுவாமி கோவிலில், சில ஆண்டுகளுக்கு முன், அர்ச்சகர் ஒருவர், உற்சவமூர்த்தியின் கிரீடத்தை திருடி, அடகு வைத்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத் தக்கது. இதுகுறித்து, திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் கூறியதாவது: திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உள்ள மூன்று கிரீடங்கள் காணாமல் போனது குறித்து, கோவிலின் பெண் பாதுகாப்பு ஊழியர் தகவல் அளித்தார். அதனடிப்படையில், கோவிலில் நடத்திய சோதனையில், கிரீடங்கள் மாயமானது தெரிய வந்தது. மாயமான, மூன்று தங்க கிரீடங்களின் எடை, 1,300 கிராம். இவை, பத்மாவதி தாயார், ஸ்ரீதேவி மற்றும் வெங்கடாசலபதிக்கு அணிவிக்கும் கிரீடங்கள் என, விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து விசாரிக்க, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !