உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றுக்கால் பகவதி கோவில் காப்புக்கட்டி உற்சவம் துவக்கம்!

ஆற்றுக்கால் பகவதி கோவில் காப்புக்கட்டி உற்சவம் துவக்கம்!

திருவனந்தபுரம்: பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும், ஆற்றுக்கால் பகவதி கோவில் பொங்கல் உற்சவத்திற்காக நேற்றிரவு காப்புக்கட்டி உற்சவம் துவங்கியது. பொங்கல் உற்சவம் வரும், 7ம் தேதி நடைபெற உள்ளது. கேரளா, திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகுதியில், பிரசித்திப் பெற்ற பகவதி கோவில் உள்ளது. இக்கோவில், "பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் பொங்கல் (பொங்காலா) உற்சவம் நடத்தப்படுகிறது. இவ்வாண்டுக்கான உற்சவம், நேற்றிரவு காப்புக்கட்டி துவங்கியது. நேற்று மாலை தீபாராதனை நிகழ்ச்சிக்குப் பின், இரவு 7.15 மணிக்கு உற்சவ மூர்த்தியை கோவிலில் இருந்து பச்சை பந்தலுக்கு எழுந்தருள செய்தனர். பின் பகவதிக்கு காப்புக்கட்டி, உற்சவம் துவங்கும். இதற்கான அனைத்து சடங்குகளும், நேற்று காலை நடை திறந்தவுடனேயே துவங்கியது. மார்ச் முதல் தேதி குழந்தைகள் பங்கேற்கும் குத்தியோட்ட விரத நிகழ்ச்சி துவங்க உள்ளது. இந்த விரத நிகழ்ச்சியில் பங்கேற்க, இவ்வாண்டு, 895 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். இக்குழந்தைகள் விரதம் துவங்கிய நாளில் இருந்து, கோவில் வளாகத்திலேயே ஏழு நாட்கள் தங்கி, முறைப்படி விரதம் இருப்பர். விரத நாட்களில் இக்குழந்தைகள், பகவதிக்கு முன்னால், 1,008 நமஸ்காரங்கள் செய்து முடிப்பர். வரும் மார்ச் 7ம் தேதி பொங்கல் நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் குருதி அர்ப்பணம் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவுறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !