கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
கோவை : கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில், தேரோட்டம் நகர வீதிகளில், பக்தர்கள் புடைசூழ, இன்று கோலாகலமாக நடக்கிறது. கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 14ம் தேதி, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் இருவேளையும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்படுகின்றன. பிப்., 21ல் தேர்த்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. பிப்., 22 முதல் 27ம் தேதி வரை அம்மன் புலி, கிளி, சிம்மம், அன்னம், காமதேனு மற்றும் வெள்ளை யானை வாகனங்களில், நகரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிப்., 24ல் திருவிளக்கு வழிபாடு நடந்தது. நேற்று இரவு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி இசை நிகழ்ச்சி நடந்தது. திருத்தேரோட்ட நாளான இன்று, காலை 5.00 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை நடக்கிறது. இன்று பகல் 3.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி, ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடலில் நடக்கிறது. இதில், பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், தமிழக வேளாண் துறை அமைச்சர் தாமோதரன், அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், கலெக்டர் கருணாகரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தேரை வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். தேர்நிலைத்திடலிலிருந்து புறப்படும் தேர், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும்,தேர்நிலைத்திடலை அடையும். தேர்த்திருவிழா முன்னிட்டு நகரில் போக்குவரத்து வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்: கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, கோவையில் இன்று போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி: கோவை கோனியம்மன் கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு, 29ம் தேதி போக்குவரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது; அதன் விபரம்: பாலக்காடு ரோட்டில் இருந்து உக்கடம் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், வாலாங்குளம் ரயில்வே மேம்பாலம் வழியாகவோ, பேரூர் பைபாஸ் ரோடு வழியாகவோ செல்ல வேண்டும். அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் மற்றும் லங்கா கார்னரில் இருந்து பாலக்காடு ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் கூட்ஸ்ஷெட் ரோடு, பெரிய கடை வீதி, வின்சென்ட் ரோடு வழியாக உக்கடம் அடைந்து, வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பஸ்கள் வழக்கம்போல் டவுன்ஹால் வழியாக உக்கடம் அடையலாம். ஆனால், டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதிக்கோ, ஒப்பணக்கார வீதிக்கோ செல்ல அனுமதி இல்லை. அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தில் இருந்து தடாகம் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் வாகனங்களில், லாரிகள் மற்றும் மினி லாரிகள் சுக்கிரவார்பேட்டை வழியாக செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக புரூக்பாண்ட் ரோடு வழியாக செல்ல வேண்டும். மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் புரூக்பாண்ட் ரோடு வழியாக அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் அடைந்து, தேவையான இடங்களுக்கு செல்ல வேண்டும். தடாகம் ரோட்டில் இருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி பாதை வழியாக சிவாலயா தியேட்டர், பேரூர் பைபாஸ் ரோடு, உக்கடம் வழியாக செல்ல வேண்டும். பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் அடைந்து, அல்லது சிவாலயா தியேட்டர், ராமமூர்த்தி பாதை, சொக்கம்புதூர், பொன்னையராஜபுரம், காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும். லாரி போக்குவரத்து தற்போது நடைமுறையில் உள்ளது போலன்றி, 29ம் தேதி ஒரு நாள் மட்டும் பகல் நேரத்தில் ராஜவீதி, ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, பெரிய கடை வீதி மற்றும் கருப்பக்கவுண்டர் வீதி ஆகிய சாலைகளில் நுழைய தற்காலிக தடை உள்ளது. இரவு 8 மணிக்கு மேல் வழக்கம் போல் நகர எல்லைக்குள் வந்து செல்லலாம். இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, கமிஷனர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.