மாமல்லபுரத்தில் கோலாகல தீர்த்தவாரி
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், ஸ்தலசயன பெருமாள், குளத்தில் தெப்பம், கடல் நீராடி தீர்த்தவாரி உற்சவம் கண்டார்.ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் பகலில், சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடந்தது. இரவு, அலங்கார சுவாமி, தேவியருடன், கோவிலிலிருந்து புறப்பட்டு, புஷ்கரணி குளத்தை அடைந்து, 8:45 மணிக்கு, அலங்கார தெப்பத்தில் எழுந்தருளினார்.மூன்று சுற்றுகள் வலம் வந்து, வீதியுலா சென்றார்.நேற்று காலை, கோவிலில் சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து, கருட வாகன சுவாமி, கோவிலிலிருந்து புறப்பட்டு, மாட வீதிகளை கடந்து, காலை, 9:00 மணிக்கு, கடற்கரையை அடைந்தார்.
திருமஞ்சனம் நடந்தது. சுவாமியின் அம்சமான சக்கரத்தாழ்வார், கடலில் புனித நீராடி, தீர்த்தவாரி உற்சவம் கண்டார்.பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என முழங்கி, கடலில் நீராடினர். மீனவ பகுதியில் வீதியுலா சென்று கோவிலை அடைந்தார்.தொல்லியல் வளாக கோவில், ஆதிவராக பெருமாள், திருவண்ணாமலை மாவட்ட, படவேடு ராமர், புனித நீராடினர். ஆளவந்தார் அறக் கட்டளை நிர்வாகம், பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கியது.தாமதம்சுவாமி, கோவிலிலிருந்து, அதிகாலை புறப்பட்டு, கடற்கரையை அடைந்து, சூரியோதயம் துவங்கியதும், சுவாமி கடலில் நீராட வேண்டியதே ஐதீகம். பல ஆண்டுகளாக, முறையான ஒருங்கிணைப்பு இல்லாததாக கூறப்படும் நிலையில், தீர்த்தவாரி மிக தாமதமாகிறது.முந்தைய ஆண்டுகளில், 8:45 மணிக்குள் நடத்திய தீர்த்தவாரி, நேற்று, 10:00 மணிக்கே நடந்தது. இவரது தீர்த்தவாரிக்கு, 45 நிமிடங்கள் முன்பே, படவேடு ராமர் தீர்த்தவாரி நடந்து, பக்தர்களும் நீராடி கலைய துவங்கினர். திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள், சதுரங்கப்பட்டினத்தில், மலைமண்டல பெருமாள், சுற்றுப்புற பகுதி சுவாமியரும், கடலில் புனித நீராடினர்.