கம்பம் சண்முகநாதன் கோயிலிற்கு செல்ல நடைபாதை அனுமதி: வனத்துறை நடவடிக்கை
கம்பம் : சண்முகநாதன் கோயிலுக்குச் செல்ல வனப்பகுதி வழியாக 1.15 கி.மீ., தூரத்திற்கு 2.5 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதை அனுமதிக்கப்பட்டுள்ளது.ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் சண்முகாநதி அணை உள்ளது. இதன் அருகில் வனப்பகுதிக்குள் சண்முகநாதன் கோயில் உள்ளது.
பிரசித்திபெற்றதும், பழமை வாய்ந்ததுமான இந்த கோயிலில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் வழிபாடு நடத்துவர். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்தரம் போன்ற விசேச நாட்களில் ஆயிரக்கணக்கில் வருவர். இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்வதற்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ரகுபதி தலைமையில், பொதுமக்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதற்கான பொருள்கள் வாகனங்களில் கொண்டு செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்து தகராறு செய்கின்றனர்.
இதனால் கிராம மக்களுக்கும், வனத்துறையினருக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பாரஸ்ட் செட்டில்மெண்ட் அதிகாரிகள் தங்களின் வரைபடத்துடன் இப்பகுதியை ஆய்வுசெய்தனர். அதில் கோயிலிற்கு செல்ல வனப்பகுதிக்குள் 1.15 கி.மீ., தூரத்திற்கு 2.5 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதை இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த பாதையை அளந்து சீரமைத்து தந்துள்ளனர். அப்பாதையை, மேகமலை சரணாலய வார்டன் கலாநிதி தலைமையிலான வனக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.வனத்துறையினர் கூறுகையில், நடைபாதை அளந்து தந்துள்ளோம். வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. அதற்கான ரோடும் அனுமதிக்கப்படவில்லை. கோயிலில் தரிசனம் செய்ய தடைசெய்ய வில்லை. பக்தர்கள், பொதுமக்கள் நடந்து சென்று கோயிலில் வழிபாடு நடத்தலாம், என்றனர்.