உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தலூர் அம்மன் கோவிலில் தேரோட்டத் திருவிழா

சித்தலூர் அம்மன் கோவிலில் தேரோட்டத் திருவிழா

தியாதுருகம்:சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. இன்று மதியம் தேரோட்டம் நடக்கிறது. தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மாசித்திருவிழா கடந்த 20ம் தேதி சிவராத்திரி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரமும் செய்து ஆராதனைகள் நடந்தது. நேற்று 9ம் நாள் திருவிழாவை முன்னிட்டு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. காலை 7 மணிக்கு மணிமுக்தா ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்துவரப்பட்டு, கோவிலை வலம் வந்தது. தொடர்ந்து கோவில் அருகில் உள்ள மயானத்தில் காளி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அங்கு ஆடு, கோழி பலியிடப்பட்டது. முதல் நாள் இரவு படையலிட்ட சுண்டலை ஆற்றங்கரையில் சூறையிட்டு மயானகொள்ளை நடந்தது.பூசாரிகள் பாஞ்சாலை, ஏழுமலை, கோவிந்தன், சுரேஷ், முருகன் ஆகியோர் பூஜைகளை செய்தனர். இன்று (29ம் தேதி) மதியம் 2 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். பக்தர்கள் வசதிக்காக கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !