பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா
பொள்ளாச்சி:பொள்ளாச்சியின் முக்கிய நிகழ்வான மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா துவங்கவுள்ள நிலையில், கோவிலின் சுற்றுப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழாவுக்கு, பக்தர்கள் அதிகளவில் வரத்துவங்கியுள்ளனர்.
இன்று (மார்ச் 2 ம் தேதி) முதல் பக்தர்கள் கோவிலுக்கு பூவோடு எடுக்கின்றனர்.தொடர்ந்து தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபடுவர். தேர்த்திருவிழா அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் திரள்வார்கள். இந்நிலையில், கோவில் சுற்றுப்பகுதியில் பல்வேறு பிரச்னைகள் நிலவுவதால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.கோவிலின் அனைத்து திசையிலும், வாகனங்கள் அனுமதிக்கப் படுவதாலும், போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் கோவில் அருகே ரோட்டில் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.பக்தர்கள் நிழல் வசதி ஏற்படுத்த, கோவில் அருகே தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி வழியாக செல்லும் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதால், மின் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.மேலும், தேர் வழித்தடம், பூவோடு வழித்தடங்களில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட ரோடுகள் முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளது.கோவில் சுற்றுப் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், மின்கம்பிகளை உயர்த்தி கட்டவும், ரோடுகளை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.