யோகி ராம்சுரத்குமார் வெள்ளி ரதத்தில் உலா
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நேற்று, வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை, யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில், பகவானின், 18வது ஆராதனை இரண்டாம் நாள் விழா நேற்று நடந்தது. செந்தில் கனபாடிகள் தலைமையில், 20க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள், வேதமந்திரம் முழங்க, மகன்யாசம் மற்றும் அதிஷ்டானத்தில், மூலவர் யோகி ராம்சுரத்குமார் லிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. காலை, 9:00 முதல், மதியம், 12:00 மணி வரை, நித்யானந்தகிரி சுவாமிகள் தலைமையில், தீர்த்த நாராயண பூஜை, பக்தர்கள் பஜனை நடந்தது.
மாலையில், ஸ்ரீமதி சுஜாதா மூர்த்தி குழுவினரின் குச்சிப்புடி நடனம், கடலுார் கோபி பாகவதர் குழுவினரின் மஹா பக்த விஜயம், பகவான் யோகி ராம் உற்சவர், வெள்ளி ரதத்தில், ஆசிரமம் உலா வரும் நிகழ்ச்சி மற்றும் ஆரத்தி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதியும், ஆசிரம தலைவருமான, அருணாசலம் வழிகாட்டுதலின்படி, அறங்காவலர், மாதேவகி உள்ளிட்டோர், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று முதல், 10ம் தேதி வரை, தினமும் மாலை, 6:15 மணிக்கு, நொச்சூர் வெங்கட்ராமன் குழுவினரின், சிவானுபவம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.