உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7 ஆயிரம் கலைஞர்கள் நடனம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7 ஆயிரம் கலைஞர்கள் நடனம்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில், கின்னஸ் சாதனைக்காக, 7,000த்துக்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள், மாணவியர், ஒரே நேரத்தில் நடனமாடினர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, இன்று, தில்லை அறக்கட்டளை சார்பில், நாட்டியாஞ்சலி விழா நடக்கிறது. இதையொட்டி, தில்லை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், கின்னஸ் உலக சாதனைக்காக, ஒரே நேரத்தில், 7,197 நடன கலைஞர்கள், மாணவியர் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சி, நேற்று நடந்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை துணைவேந்தர், முருகேசன் தலைமையில், பத்மபூஷன் விருது பெற்ற நாட்டிய கலைஞர், பத்மா சுப்ரமணியம் துவக்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களின் நடன கலைஞர்கள், நாட்டிய பள்ளி மாணவியர் என, 7,197 பேர், 16 நிமிடங்கள் நடனமாடினர்.

பத்மா சுப்ரமணியம் கூறுகையில், நடனத்தில் சிறந்தது என, போற்றப்படுவது பரதம். எல்லையில், தற்போது பதட்டமான சூழல் உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களின் நடனம், பதட்டத்தை போக்கும் வல்லமை படைத்தது, என்றார். நிகழ்ச்சியில், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ரவிச்சந்திரன், கின்னஸ் கமிட்டி ரிஷிநாத், கிரியேட்டிவ் நிறுவன நிர்வாகி விவேக், சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலர் நடேச தீட்சிதர், தில்லை நாட்டியாஞ்சலி குழு தலைவர் நவமணி தீட்சிதர், ஆடிட்டர் வைத்தியநாதன், வழக்கறிஞர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !