மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் பிறந்நாள் விழா
மேல்மருவத்தூர்: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழாவில், ஏராளமான பக்தர்கள், நேற்று (மார்ச்., 3ல்) பங்கேற்றனர்.மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின், 79வது பிறந்த நாள் விழா, நேற்று (மார்ச்., 3ல்)நடைபெற்றது.
தொடர்ந்து, அதிகாலை. 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை, 8:30 மணிக்கு, சித்தர் பீடம் வந்த அடிகளாருக்கு, பக்தர்கள், சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின், கருவறைக்கு சென்று, சுயம்பு அன்னை, ஆதிபராசக்தி அம்மனை, அடிகளார் வழிபட்டார். பிறந்த நாள் கேக் வெட்டி, மனைவி, லட்சுமி பங்காரு அடிகளார், மகன்கள் அன்பழகன், செந்தில்குமார் உட்பட, குடும்பத்தினருக்கு அளித்தார்.சென்னை, கலைமாமணி ரேவதி கிருஷ்ணன், வீணை இசையும், காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான், கும்ப கோணம் பாலாஜி சாய்ராம் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
சிறப்பு அலங்கார மேடையில், அடிகளார் அமர்ந்து, செவ்வாடை பக்தர்களுக்கு, அருளாசி கொடுத்தார். முக்கிய பிரமுகர்கள், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞர் அணி சார்பில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், ஏற்பாடு செய்யப்பட்டன.