உடுமலை, மாரியம்மன் கோவில் திருவிழா ஏப்., 9ம் தேதி துவங்குகிறது
உடுமலை:உடுமலை, மாரியம்மன் கோவில் திருவிழா, துவங்க ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், தேரோடும் வீதிகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலையில், சுற்றுப்பகுதி கிராம மக்கள் வழிபடும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா, ஏப்., 9ம் தேதி துவங்குகிறது.
அன்று நோன்பு சாட்டுதலுடன் துவங்கி, 16ம்தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 24ம்தேதி திருக்கல்யாணம் மற்றும் 25ம்தேதி தேரோட்டமும் நடக்கிறது.
வேறு மாவட்டங் களிலிருந்தும், ஆயிரக்கணக்கானோர், தேரோட்டத்தில் பங்கேற்பர். ஆண்டுதோறும், தேரோடும் வீதிகளில், நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்கிறது. கடந்தாண்டு, இத்தகைய அடிப்படை வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படவில்லை
இதனால், தேர் வலம் வரும் வீதியில் ஒன்றான நெல்லுக்கடை வீதியில், ரோட்டிலுள்ள குழியில் திருத்தேரின் சக்கரங்கள் சிக்கியது. இதனால், ரோட்டோரத்திலிருந்து, மின்கம்பங்கள் சேதமடைந்து, தேர் அவ்விடத்தை கடந்து செல்ல பல மணி நேரம் தாமதமானது.இச்சம்பம் உடுமலை மக்களிடம் வேதனையை ஏற்படுத்தியது. நடப்பாண்டில் திருவிழா துவங்குவதற்கு, ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், சீரமைப்பு பணிகளை முறையாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.