திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சதீபம்
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பிரம்ம தீர்த்த குளக்கரையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேற்று லட்சதீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
கும்பாபிஷேக பணிகளால், பாதுகாப்பு கருதி, கடந்த, 5 ஆண்டுகளாக லட்சதீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று, மகா சிவராத்திரியை முன்னிட்டு, அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதியுடன், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிரம்ம தீர்த்த குளக்கரையில், லட்சதீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபட்டனர்.
வண்ண மலர்களால் லட்சார்ச்சனை: மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜை, வழிபாடு, நேற்று நடந்தது. காலை, 5:00 மணி, இரவு, 7:30 மணி, 11:30 மணி, நள்ளிரவு, 1:00 மணி, வண்ண மலர்களால், அருணாசலேஸ்வரருக்கு லட்சார்ச்சனை நடந்தது. இதையொட்டி, மக்காச்சோளம், அன்னாசியில், தோரணம் கட்டப்பட்டிருந்தது. 24 மணி நேரம், 108 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும், நாதஸ்வர சங்கமம் இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. கோவில் கலையரங்கில், தேவாரப் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு வரை நடந்த, மகா சிவராத்திரி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை, 2:30 மணி, 4:30 மணிக்கு, மூலவருக்கு, நான்கு கால பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது.