பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிப் பெட்டிகள் திரும்பின
உசிலம்பட்டி, பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் திருவிழாவிற்காக உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மாசிப்பெட்டிகள் பக்தர்கள் புடைசூழ திரும்ப கொண்டு வந்தனர்.
பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகாசிவராத்திரி மாசித் திருவிழாவிற்காக உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் இருந்து அம்மனின் ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் மார்ச் 4 காலை 10:30 மணியளவில் பூஜாரிகள், கோடாங்கிகள், பக்தர்கள் எடுத்துச் சென்றனர். அன்றைய தின இரவில் சிவராத்திரி வழிபாடு நிறைவு பெற்ற பின் பெட்டிகள் வடகாட்டுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று மாலை 5:30 மணியளவில் சிறப்பு வழிபாடுகளுக்குப்பின் பெட்டிகள் ஊர்வலமாக சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. உசிலம்பட்டி டவுண் போலீஸ் ஸ்டேஷன் அருகில் இருந்து அய்யன்சாமியும், மாயாண்டி சாமியும் பாதாள கட்டையில் ஏறி (ஆணி அடிக்கப்பட்ட காலணி) கோயில் வரையில் நடந்து வந்தனர். தொடர்ந்து சப்தகன்னிமார்களின் ஆட்டத்துடன் பெட்டிகள் சின்னக்கருப்பசாமி கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.