வீரபாண்டி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: பங்குனி தேரோட்டம் கோலாகலம்
வீரபாண்டி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க, பங்குனி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சேலம், பெருமாம்பட்டி, வலியன்காடு வெற்றிவேல் முருகன் கோவிலில், பங்குனி திருவிழா, கடந்த, 15ல், கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று (மார்ச்., 20ல்) காலை, 7:00 மணிக்கு வள்ளி தெய்வானையுடன், சிறப்பு அலங்காரத்தில் முருகன், தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன், வடம்பிடித்து தேரை இழுத்தனர். கோவில் முன் தொடங்கிய தேரோட்டம், செம்மண்திட்டு வழியாக, திருமலை கிரியை அடைந்தது. அங்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அங்கிருந்து, 3:00 மணிக்கு தொடங்கிய தேரோட்டம், தண்ணீர்பந்தல் காடு, மொட்டையன் தெரு, பாலிக்காடு உள்ளிட்ட வீதிகள் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. இன்று (மார்ச்., 21ல்), சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கும். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.
* இளம்பிள்ளை, ஏரிக்கரையில் எதிரெதிரே உள்ள, மாரியம்மன், காளியம்மன் கோவில்களின் பங்குனி தேர் திருவிழா, கம்பம் போடுதல் மற்றும் பூச்சாட்டுதல் வைபவத்துடன், நேற்று முன்தினம் (மார்ச்., 19ல்) தொடங்கியது. இதையொட்டி, வண்ண மலர்களால், மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. வரும், 29ல் கொடியேற்றம், விநாயகர் தேரோட்டம் நடக்கிறது.
அன்று முதல், ஏப்., 3 வரை, தினமும் இரவு, அம்மன் விதவித அலங்காரங்களில், வெவ்வேறு வாகனங்களில், திருவீதி உலா வருவார். ஏப்., 4ல் தேரோட்டம் நடக்கும்.