நாமக்கல் நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் சுவாமி தேரோட்டம் கோலாகலம்
நாமக்கல்: நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளின், பங்குனி தேரோட்டம், கோலாகலமாக நடந்தது. நாமக்கல், நரசிம்மர், ஆஞ்சநேயர், அரங்கநாதர் கோவில்களில், பங்குனி தேர் திருவிழா, கடந்த, 14ல் துவங்கியது. ஒவ்வொரு நாளும், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 20ல் நரசிம்மர் மற்றும் அரங்க நாதருக்கு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று (மார்ச்., 22ல்) காலை, நரசிம்ம சுவாமி தேரோட்டம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தேரை இழுத்துச் சென்றனர். மாலை, 4:30 மணிக்கு, நாமக்கல் பிரதான சாலையில் உள்ள அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி தேரோட்டம் நடந்தது. மாரியம்மன் கோவில் தெரு, கவிஞர் ராமலிங்கம் தெரு, சேந்தமங்கலம் சாலை, பிரதான சாலை வழியாக சென்ற தேர் நிலை சேர்ந்தது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தேர் திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் நகரில் போக்கு வரத்து மாற்றி அமைக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.