உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை-1

சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை-1

சிருங்கேரி பீடாதிபதி பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் நாளை (மார்ச் 6) முதல், ஏப்ரல் 1 வரை தமிழகத்தில் விஜயயாத்திரை மேற்கொள்கிறார். இதையொட்டி, இந்த சிறப்புப் பகுதியைத் தந்துள்ளோம். ஆதிசங்கரர் சீடர்களுடன் துங்கபத்ராநதிக்கரையில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஆச்சரியப்படும்படியான ஒரு காட்சியைக் கண்டார். வெயிலில் அவதிப்பட்ட தவளை ஒன்றுக்கு, நாகப்பாம்பு படமெடுத்து நிழல் தந்து கொண்டிருந்தது. தன் இரையான தவளைக்குக் கூட பாம்பு இரக்கப்படுவது இம்மண்ணின் மகிமை என்று உணர்ந்த அவர், தன் முதலாவது பீடத்தை அத்தலத்தில் அமைக்க முடிவெடுத்தார். அங்கிருந்த பாறையின் மீது அம்பாளின் யந்திரமான ஸ்ரீசக்ரத்தை வரைந்தார்.

சரஸ்வதியை தியானித்து, தாயே! இத்தலத்தில் "சாரதா என்னும் திருநாமத்துடன் நிரந்தரமாக வீற்றிருந்து அருள்புரிய வேண்டும், என்று வேண்டினார். அவரால் தோற்றுவிக்கப்பட்ட பீடமே "சிருங்கேரி சாரதா பீடம் என்று அழைக்கப்படுகிறது. சம்பிரதாயமாக, இதனை, "தக்ஷிணாம்னாய சிருங்கேரி சாரதா பீடம் என்று சொல்வர். "தக்ஷிணாம்னாய என்றால் தென்திசையில் உள்ள என பொருள். இந்த பீடத்திற்குரிய வேதம் யஜுர். கைலாயத்தில் இருந்து சங்கரர் கொண்டுவந்த சந்திரமவுலீஸ்வரர் ஸ்படிக லிங்கத்தையும், ரத்தின கர்ப்பகணபதி விக்ரஹத்தையும் இம்மடத்திற்கு நித்யபூஜைக்காக அளித்தார். இவை 1200 ஆண்டுகள் பழமையானவை.

சிருங்கேரியின் காவல் தெய்வங்களாக கிழக்கில் காலபைரவர், மேற்கில் ஆஞ்சநேயர், வடக்கில் காளி, தெற்கில் வனதுர்கா ஆகிய தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்தார். சாரதா பீடத்தின் நிர்வாகத்தை, தன் சீடரான சுரேஸ்வராசார்யாரிடம் ஒப்படைத்தார். இப்பீடத்தின் ஆச்சார்யார்களாக பொறுப்பேற்பவர்கள், தன்னுடைய அம்சம் பொருந்தியவர்களாகத் திகழ்வர் எனஆசிர்வதித்தார். இதன் அடிப்படையில் இவர்களை, "ஸ்ரீசங்கராச்சார்யா என்று குறிப்பிடுவர். இந்த தெய்வீக பரம்பரையில், 36வது ஜகத்குருவாக பாரதீதீர்த்த சங்கராச்சார்ய சுவாமிகள் அருள்பாலித்து வருகிறார். 1989முதல் இவருடைய பொறுப்பில் சிருங்கேரி மடம் இருந்து வருகிறது. விஜய யாத்திரையாக மார்ச் 6 முதல் ஏப்.1 வரை தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். இவர் தங்குமிடங்களில் தினமும் இரவு 8.30மணிக்கு சந்திரமவுலீஸ்வரர் ஸ்படிக லிங்கம், ரத்னகர்ப்ப கணபதிக்கு பூஜை நடத்துகிறார். நாளை (மார்ச் 6) கிருஷ்ணகிரி, ஜக்கப்பன்நகர் விஜயலட்சுமி கல்யாண மண்டபத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !