திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் தேர் சீரமைப்பு பணி தீவிரம்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் சித்திரை பெருவிழா, வரும், 10ம் தேதி துவங்குவதை ஒட்டி, தேர்கள் சீரமைப்பு பணி துவங்கியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில், புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
பல்லவர் கால கோவிலாக வேதகிரீஸ்வரர் கோவிலும், சோழர் கால கோவிலாக பக்தவத் சலேஸ்வரர் கோவிலும் உள்ளன.திருவண்ணாமலையை போல், கிரிவலம் நடைபெறுவதால், பல பகுதிகளில் இருந்து, மாதம்தோறும், பக்தர்கள் வருகின்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா, இந்தாண்டு, 9ம் தேதி விநாயகர் உற்சவத்துடனும், 10ல் கொடியேற்றத்துடனும் துவங்குகிறது.பிரதான விழாவாக, 12ல், வெள்ளி அதிகார நந்தி மற்றும் 63 நாயன்மார்கள் மலைவலம் உற்சவமும், 16ல், பஞ்சரத உற்சவமும் நடைபெற உள்ளது. 20ல், நூதன விமான சேவையுடன், விழா நிறைவடைகிறது. இதற்காக, ஐந்து தேர்களின் சீரமைப்பு பணிகளை, ஹிந்து அறநிலையத் துறையினர் துவங்கியுள்ளனர்.
தாழக்கோவில் எதிரே நிறுத்தப்பட்டிருந்த தேர்களின் இரும்பு தகர மேற்கூரைகள் அகற்றப் பட்டு, மர சுதை சிற்பம் சரி செய்தல், கிரிஸ் அடித்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.