அன்னூரில் அத்திக்கடவு திட்டத்திற்காக கோவில்களில் சிறப்பு வழிபாடு
அன்னூர்:அத்திக்கடவு திட்டம் விரைவில் நிறைவேற வேண்டி, அன்னூரில், 20 கிராம கோவில்களில் நேற்று (ஏப்., 14ல்) சிறப்பு வழிபாடு நடந்தது.அத்திக்கடவு திட்டத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும், அத்திக்கடவு கூட்டமைப்பு சார்பில், சித்திரை முதல் நாளன்று, பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து வழிபாடு செய்வது வழக்கம்.நேற்று (ஏப்., 14ல்) அதிகாலையில், தீர்த்தம் எடுத்து வந்த ஆர்வலர்கள், விவசாயிகள், பிள்ளையப்பம் பாளையம், சாளையூர், வடவள்ளி, குப்பேபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், பொகலூர் உள்ளிட்ட, 20 ஊர்களிலுள்ள கோவில்களுக்கு கொண்டு வந்தனர்.
அங்கு நேற்று (ஏப்., 14ல்) மதியம் வழிபாடு நடந்தது. விவசாயிகள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. திட்ட ஆர்வலர்கள், பெண்கள், விவசாயிகள் என பலர் பங்கேற்றனர்.