பொள்ளாச்சி தமிழ் புத்தாண்டு வழிபாடு கோவில்களில் சிறப்பு பூஜை
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி கடைவீதி பாலகணேசர் கோவிலில் காலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவசம் அணிவித்தல், முக்கனிகள் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.மேலும், ரூபாய் நோட்டுகளால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு முக்கனி மற்றும் நாணயமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், கனகாபிஷேகம் நடந்தது. காலை, 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கோமாதா பூஜை, 16 வகையான திருமஞ்சன
அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளும்; காலை, 6:00 மணிக்கு பொற்காசுகளால் கனகாபிஷேகமும் நடந்தது. பக்தர்களுக்கு கனகாபிஷேக காசுகள் மற்றும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சாய்நாதர் கோவிலில், காலை 8:00 மணி முதல் அபிஷேகம், அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதப் பெருமாள் கோவிலில், ஒன்பது வகை அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், ரூபாய் நோட்டுகளால் அலங்கார மாலை அணிவிக்கப்பட்டது.
முக்கனிகள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு கனி வகைகள், மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. ராஜஅலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன்கோவில், வாழைத் தோட்டம் ஐயப்பசுவாமி கோவில், கருமலை பாலாஜி கோவிலில், தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார வழிபாடும் நடந்தன.