உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவின் குகை

குருவின் குகை

கேரளாவிலுள்ள காலடியில் அவதரித்த ஆதிசங்கரர்  துறவுக்கு தயாரானார். மத்திய பிரதேசத்தில் ஓடும் நர்மதை நதிக்கரையில் உள்ள மகான் கோவிந்த் பகவத்பாதரை குகை ஒன்றில் சந்தித்தார். அவரை குருநாதராக ஏற்று, வேதங்களைக் கற்றார். அந்த குகை எங்குள்ளது என்ற விபரம் அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஒருமுறை தைஅமாவாசை அன்று, நர்மதை நதியில் நீராடச் சென்றேன். அங்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், ” ஆதிசங்கரர் சந்நியாசம் பெற்ற குகை இங்கு தானே இருக்கு! உனக்கு தெரியுமா?” என்று  கேட்டார். விழித்தேன். ”சரி.. தேடிப்பார்! கிடைக்கும்” என்று சொல்லி விட்டு கூட்டத்தில் மறைந்தார். குகையை தேடத் தொடங்கினேன். இந்த விஷயத்தில் ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமி என்னை ஊக்கப்படுத்தினார்.  

’நர்மதை’யுடன் ’ஹிரன்’ என்னும் ஆறு கலக்கும் பகுதியான ’ஸாங்கல்காட்’  என்ற கிராமத்தை அடைந்தேன். முன்பு இந்த இடம் ’சங்கர் காட்’ எனப்பட்டது. ஆதிசங்கரர் இங்கு தங்கி இருந்ததாக ’நர்மதை ரகசியம்’ என்னும் நூல் கூறுகிறது. ஆற்றைக் கடக்க ’டோங்கோ’ என்னும் குறுகிய படகில் சென்றேன். ’பாலன்ஸ்’  தவறியதால் படகு கவிழ, நீச்சலடித்து கரைக்குச் சென்றேன். 4கி.மீ., தூரத்தில் ஒரு மலை மேட்டில் குகை ஒன்று தென்பட்டது. புலிகள் ஒளிவதை தடுக்க, அப்பகுதியினர் பாறையால் குகையின் வாசலை அடைத்திருந்தனர். இப்பகுதியில் நடக்கும் போது ’டங் டங்’ என வெண்கல ஓசை கேட்டது.  குகையின் மேற்புறம் வெளிச்சம் வருவதற்கு துளைகள் இருந்தன. வேறு சில குகைகளையும் பார்வையிட்ட பின், விபரங்களை  ஸ்வரூபானந்த சரஸ்வதி சுவாமியிடம் காண்பித்தேன். அப்போது ஆதிசங்கரர், தன் குருநாதரை சந்தித்த இடம் காஞ்சிப் பெரியவருக்கு தெரியும் என்ற குறிப்பு ஒரு நூலில் இருப்பதை அவரிடம் தெரிவித்தேன்.

அவரும் காஞ்சிப்பெரியவரை சந்திக்குமாறு சொன்னார். அந்த சமயத்தில் காஞ்சிப்பெரியவர் மவுன விரதம் இருந்தார்.  ஆனால் நான் அவரைச் சென்ற அன்று தான், மவுனத்தை கலைத்திருந்தார். சீடர் மூலம் சொல்லி அனுப்பினேன்.  அவரோ, ” நேரத்தை வீணாக்காமல், கையில் உள்ள குறிப்புகளை நன்றாக பார்க்கும்படி பெரியவர் சொன்னார்’ என சொல்ல, தூக்கி வாரிப் போட்டது எனக்கு. நான் வந்த காரணத்தை தெரிவிக்காத நிலையில், அவர் இப்படி கூற, அதிர்ந்தேன். தேர்வுக்கு செல்லும் மாணவன் போல குறிப்புகளை பார்த்தேன். - ஜபல்பூர் நாகராஜசர்மா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !