விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்!
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவையொட்டி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நேற்று நடந்தது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமகத் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதியுலா நடந்தது. ஆறாம் நாள் நடந்த ஐதீகப் பெருவிழாவில் விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நாளான நேற்று காலை பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நடந்தது. விருத்தகிரீஸ்வரர், முருகன், விநாயகர், விருத்தாம்பிகை, சண்டிகேஸ்வரர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் நான்கு வீதிகளையும் வலம் வந்தனர். பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இன்று 7ம் தேதி தீர்த்தவாரியும், நாளை 8ம் தேதி புதுப்பேட்டையில் உள்ள அம்மன் குளத்தில் தெப்பல் திருவிழாவும் நடக்கிறது.