குருவாயூர் கோவிலின் யானைகள் ஓட்டப்பந்தயத்தில் கண்ணனுக்கு முதல் பரிசு!
குருவாயூர்:ஆண்டுதோறும், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஆராட்டு உற்சவத்திற்கு முன்னோடியாக நடத்தப்படும், யானை ஓட்டப்பந்தயத்தில் ஒன்பதாவது முறையாக, இவ்வாண்டும் கண்ணன் என்ற யானை முதலாவதாக ஓடி வந்து முதல் பரிசை வென்றது.
கேரளா, திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவிலில், ஆண்டுதோறும் ஆராட்டு உற்சவம் மாசி மாதம் நடத்தப்படுவது வழக்கம். உற்சவம் துவங்குவதற்கு முன்னோடியாக, குருவாயூர் தேவஸ்வம் போர்டு பராமரித்து வரும், 64 யானைகளில் சிலவற்றை தேர்வு செய்து, அவற்றிற்கு ஓட்டப்பந்தயம் நடத்தி, பரிசுகள் வழங்கப்படுகிறது.அவ்வாறு இவ்வாண்டுக்கான ஓட்டப்பந்தயம், நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில், கோவில் மணி மூன்று முறை ஒலித்ததும், இதற்கான நிகழ்ச்சிகள் துவங்கியது. பந்தயத்தில், கோபிகண்ணன், கண்ணன், உமாதேவி, அச்சுதன், ஜூனியர் மாதவன் ஆகிய ஐந்து யானைகள் தேர்வாகி தயாராக நின்றன. பாரம்பரிய முறைப்படி, மாதம்பாடு நம்பியார் மற்றும் கண்டியூர் நம்பீசன் ஆகியோர், யானைகளின் கழுத்தில் அணிக்க வேண்டிய மணிகளை பாகன்களிடம் வழங்கினர். அவற்றை பாகன்கள் ஒலித்தவாறே, யானைகள் நின்ற இடத்திற்கு ஓடிச் சென்றனர். மணிகளின் ஒலியை கேட்ட ஜூனியர் மாதவன் மற்றும் உமாதேவி ஆகிய யானைகள் சற்று மிரண்டன. உமாதேவி பயந்துபோய் அருகே உள்ள நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் ஓடிச் சென்று நின்றது. இதை அடுத்து உமாதேவியை தவிர்த்து, பதிலாக, சங்கரநாராயணன் என்ற யானையை பந்தயத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.சங்கின் ஒலி கேட்டதும், யானைகள் ஓடத்துவங்கின. துவக்கத்தில், ஜூனியர் மாதவன் தான் முதலில் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டாம் இடத்தில் கண்ணனும், அச்சுதன் ஓடிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்திலேயே ஜூனியர் மாதவனை முந்திக்கொண்டு கண்ணன் ஓடியது. தொடர்ந்து முன்னிலேயே ஓடிய கண்ணன் முதலிடம் பெற்றது. இரண்டாம் பரிசை அச்சுதனும், மூன்றாம் பரிசை ஜூனியர் மாதவனும் பெற்றன. முதல் மூன்று இடங்களை வென்ற யானைகள் கோவிலை வலம் வந்து மூலவரை வணங்கி நின்றதுடன் ஓட்டப்பந்தயம் நிறைவடைந்தது. வெற்றி பெற்ற கண்ணன் இவ்வாண்டு, 50ம் வயதில் அடிஎடுத்து வைக்கிறது. இந்த ஒட்டப்பந்தயத்தில் தொடர்ச்சியாக, முதலிடம் பெறுவது இது ஒன்பதாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் உற்சவத்திற்கான கொடியேற்ற நிகழ்ச்சி கோவிலில் நடந்தது.