கும்பகோணம் அருகே, ராஜராஜ சோழன் சமாதி: தொல்லியல் துறையினர் ஆய்வு
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, உடையாளூரில் இருப்பது, மாமன்னன், ராஜராஜ சோழன் சமாதியா என, தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வுப் பணியை துவங்கினர்.
சோழ மன்னன் ராஜராஜனின் சமாதி இருப்பதாக கூறப்படும் உடையாளூரில், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அங்கு மணி மண்டபம் அமைக்க கோரி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த, வக்கீல், திருமுருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை, 11ம் தேதி விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், உடையாளூரில் ராஜராஜன் சமாதி இருப்பது உண்மையா என, அகழ்வாராய்ச்சி செய்து, அதன் அறிக்கையை, ஆறு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து, நேற்று 22ல், தமிழக தொல்லியல் துறை, துணை இயக்குனர், சிவானந்தம், தொல்லியல் அலுவலர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர், சமாதி இருப்பதாக கூறப்படும் பகுதியில், 10 ஏக்கரில் ஆய்வுப் பணியை துவங்கினர்.
அப்போது, ஆளில்லா குட்டி விமானத்தில், நவீன கேமராக்கள் பொருத்தி, பூமியின் மேற்பரப்பு மற்றும் பூமிக்கடியில், 2 மீட்டர் ஆழத்தில் நீரோட்டம், பழமையான கட்டடங்களின் தன்மை, தற்போதைய கட்டடங்கள் ஆகியவற்றை படம் பிடித்தும், அதன் கோணங்களையும், கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்தனர். மேலும், உடையாளூரில் பால்குளத்து அம்மன் கோவில், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வை மேற்கொண்டனர்.இந்த ஆய்வு, இன்றும் தொடர்கிறது. இதன் அறிக்கை, தமிழக தொல்லியல் துறை ஆணையகத்துக்கு அனுப்பி, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என, தொல்லியல் அலுவலர்கள் தெரிவித்தனர்.