உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திருக்கல்யாண உற்சவம்

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திருக்கல்யாண உற்சவம்

உடுமலை:உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று (ஏப்., 24ல்) அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 9ம் தேதி, பூச்சொரிதல் மற்றும் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தொடர்ந்து, கம்பம் நடுதல், திருவிழா கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. காமதேனு, ரிஷபம், அன்ன வாகனத்திலும், நேற்று (ஏப்., 23ல்) மாலை, சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் கோவிலுக்கு, தீர்த்தக்குடம் எடுத்து வந்தும், திருக்கம்பத்திற்கு நீர் ஊற்றியும் வழிபட்டு வருகின்றனர்.

மேலும், கடந்த, 19ம் தேதி முதல், நேற்று (ஏப்., 23ல்) இரவு வரை, பக்தர்கள் நேர்த்திக்கடனாக பூவோடு எடுத்து வந்தும், முளைப்பாரி எடுத்து வந்தும் அம்மனை தரிசித்தனர். நேற்றுமுன் தினம் (ஏப்., 22ல்) இரவு, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர். கிரேன்களில், முதுகில் அலகு குத்தியும், பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், பறவை காவடி எடுத்து வந்தும், தீச்சட்டி ஏந்தி வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இன்று (ஏப்., 24ல்) அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலமும், மாலை, 4:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

நாளை (ஏப்., 25ல்), முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடக்கிறது. காலை, 6:45 மணிக்கு, மாரியம்மன் சுவாமியுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:15 மணிக்கு, தேர் வடம் பிடித்தல் மற்றும் திருத்தேரோட்டம் நடக்கிறது.வரும் 26ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, அம்மன் ஊஞ்சல் உற்சவம், மாலை, 4:00 மணிக்கு, அம்மன் மூல மந்திர திரிசதி அர்ச்சனை, இரவு, 8:00 மணிக்கு, பரிவேட்டை, இரவு, 10:00 மணிக்குவான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !