உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபி ஐயன் சுவாமி கோவிலில், உருவபொம்மை வைத்து வழிபட்டால் உருண்டோடும் பிரச்னை

கோபி ஐயன் சுவாமி கோவிலில், உருவபொம்மை வைத்து வழிபட்டால் உருண்டோடும் பிரச்னை

கோபி: சித்திரை விழாவை முன்னிட்டு, கவுந்தப்பாடி தம்பிக்கலை ஐயன் சுவாமி கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், உருவ பொம்மை வைத்து வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே, பிரசித்தி பெற்ற தம்பிக்கலை ஐயன்சுவாமி கோவில் உள்ளது. ராகு, கேது தோஷம் நீக்கும், பிரசித்தி பெற்ற ஸ்தலமாக உள்ளது. உயிருடன் நாகங்கள் உலாவரும் திருத்தலத்தில், மூன்று கால பூஜை நடக்கிறது. கொடிய விஷத்தன்மை யுள்ள நாகம் தீண்டியவர்களை கூட, உயிர் பிழைக்க வைப்பது, கோவிலின் சிறப்பம்சமாகும். தவிர தோல் வியாதி, தோல் நமைச்சல், பூரான், தேள் கடி உள்ளிட்டவற்றுக்கு மண் சொப்பில், தண்ணீர் மந்திரித்து, வேப்பிலை பாடம் போடப்படுகிறது. திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, உருவ பொம்மை வைத்து வழிபடுவதும், இக்கோவிலின் தனிச்சிறப்பு.

கடந்த, 16 முதல், 21 வரை, சித்திரை திருவிழா இங்கு நடந்தது. இதன் தொடர்ச்சியாக, மறுபூஜை நேற்று 26ல் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், காவடி எடுத்து வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களால் வைக்கப்பட்ட உருவ சிலைகள், கோவில் வளாகத்தில், ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன.

இதுகுறித்து உருவ பொம்மை விற்பனையாளர் சாரதா, பிரபா கூறியதாவது: கடந்த, 30 ஆண்டுகளாக, உருவ பொம்மை, சிலைகள் தயாரித்து விற்கிறோம். சித்திரை திருவிழா
சமயத்தில் மட்டுமே, கோவில் வளாகத்தில், பொம்மை விற்பனை நடக்கும். பிற நாட்களில், கோவில் நிர்வாகம் மூலமாக, உருவ பொம்மைகள் வாங்கி கொள்ள வேண்டும்.

ஆண், பெண், குழந்தை, வளர்ப்பு நாய், வேட்டை நாய், பசுமாடு ஆகிய உருவங்கள் மற்றும் தேள், பாம்பு, பூரான் ஆகிய மூன்றும் சேர்ந்த உருபொம்மை தயாரிக்கிறோம். இதில்லாமல், திருமணம் வேண்டியும், குழந்தை வரம் கேட்டும், வளர்ப்பு விலங்குகள், கால்நடைகள் நீண்ட ஆயுள் பெறவும், மக்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதலுக்கு முன்னதாகவும், வேண்டுதல்

நிறைவேறிய பிறகும், உருவ பொம்மைகளை வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாய் உருவம் வைத்து வழிபாடு: கவுந்தப்பாடி அருகேயுள்ள சலங்கபாளையத்தை சேர்ந்த, ஒரு பெண் பக்தர், நாய் உருவ பொம்மையை, கோவிலில் வைத்து தரிசித்தார். இதுகுறித்து
அவர் கூறியதாவது: வீட்டில் வளர்த்த நாய்கள், சாலைக்கு ஓடி, வாகனங்களில் சிக்கி பலியாகின. இதனால் வீட்டில் வளர்க்கும் நாய்கள், நீண்ட ஆயுளுடன் இருக்க, தம்பிக்கலை ஐயன் சுவாமியிடம் வேண்டினேன். அதன் பிறகு, நான் எடுத்த வளர்த்த நாய் குட்டி, நன்றாக உள்ளது. இதனால் நாய் உருவ பொம்மை வைத்து வழிபட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !