நாமக்கல் செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பால்குட ஊர்வலம்
நாமக்கல்: செல்லப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஏப்., 29ல்) பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில், 500 ஆண்டுகள் பழமையான சுயம்பு மாரியம்மன் கோவில் செல்லப்பம்பட்டியில் உள்ளது.
இக்கோவில் திருவிழா கடந்த, 10ல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. அன்று, சுவாமி தங்க கவசத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு அபி ஷேகம், ஆராதனை நடந்து வருகிறது. இன்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஏப்., 30), இரவு, 8:00 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையலும், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது.
மே, 1ல், இரவு, 8:00 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், குதிரை வாகனத்தில், சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மே, 2ல், காலை, 8:00 மணிக்கு கோடுகிழித்து கும்பிடுதல், பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல், மாலை, 4:00 மணிக்கு பெரிய, சிறிய அலகு குத்தும் பக்தர்கள் அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றுதல், முளைப்பாரி, பூங்கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மே, 3ல், காலை, 7:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், பகல், 12:00 மணிக்கு பிரசித்தி பெற்ற காட்டேரி வேடம், மாலை, 4:00 மணிக்கு வண்டி வேடிக்கை, இதிகாச கால வேடங்கள் அணிந்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
மே, 4ல், மாலை, 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து வாணவேடிக்கை, கம்பம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.