உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் இட்லி ரூ. 20, தோசை ரூ. 100: அராஜகம்

சதுரகிரியில் இட்லி ரூ. 20, தோசை ரூ. 100: அராஜகம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரியில் பக்தர்களின் பசியை போக்கி வந்த தனியார் அன்னதான மடங்கள் மூடப்பட்டுள்ளதால், கடைகளில் இட்லி ரூ.20, தோசை ரூ. 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்வது வழக்கம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 10 பேர் பலியாயினர். இதனால் அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களுக்கு மலையடிவாரம், மலையில் தனியார் அன்னதான மடங்கள் இடைவிடாது அன்னதானம் வழங்கி பசியை போக்கி வந்தன. சுற்று சூழல் மற்றும் சுகாதார கேடு என்ற காரணத்தை கூறி மலையில் செயல்பட்டு வந்த அன்னதான மடங்களை அறநிலையத்துறை மூட உத்தரவிட்டது. சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் (மே., 2ல்) முதல் பக்தர்கள் சதுரகிரிக்கு வரத்துவங்கினர். வறட்சியால் ஓடைகளில் தண்ணீர் இல்லை. மலைப்பாதையில் அறநிலையத்துறையோ, வனத்துறையோ தண்ணீர் வசதியும் செய்யவில்லை. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் மலையேறும் பக்தர்கள், கோயிலுக்கு செல்வதற்குள் காலியாகி தவிக்கின்றனர். மலையில் ஒரு அடிகுழாயில் வரும் தண்ணீரை மட்டுமே பிடித்து குடிக்க வேண்டியுள்ளது.

ஓட்டல்களுக்கு அனுமதி: மலைப்பாதை, மலையில் அறநிலையத்துறை அனுமதியுடன் சில ஓட்டல்கள் இயங்குகின்றன. இங்கு இட்லி ரூ.20, தோசை ரூ.100க்கு விற்கபடுவதால் பக்தர்கள் விரக்தியடைந்துள்ளனர். இதற்காகவே அன்னதான மடங்களை அறநிலையத்துறை மூடியுள்ளது என அவர்கள் கொந்தளிக்கின்றனர். விஸ்வ ஹிந்து பரிஷத்தும் இது குறித்து புகாரளித்துள்ளது. பக்தர்களின் புகாரை சமாளிக்கும் வகையில் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் தொன்னையில் வைத்து சர்க்கரை பொங்கல், புளியோதரை பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்னதான மடங்கள் இருந்தால் தாகம், பசிக்கு தீர்வு கிடைத்திருக்கும் என நேற்று (மே., 3ல்) கோயிலுக்கு சென்று திரும்பிய பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். கோயிலுக்கு வரும் முதியவர்கள் தாகத்தாலும் பசியாலும் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !