குழந்தைகளிடம் அன்பாயிருங்கள்
முஆவியா என்பவர் இறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது மகன் யஜீது. ஒருநாள் மகன் மீது கோபமுடன் இருந்தார் முஆவியா. அப்போது அஹ்னப் என்பவர் முஆவியாவை சந்திக்க வீட்டுக்கு வந்தார். முஆவியாவுக்கும், அவரது மகனுக்கும் கருத்துவேறுபாடு இருப்பதை புரிந்து கொண்ட அவர், “இறைநம்பிக்கையாளரே! குழந்தைகள் நம் உள்ளங்களின் கனிகள். நம் மடியில் சாய்ந்து கொள்ளும் உரிமை உடையவர்கள். அவர்களிடம் பூமியைப் போல பொறுமையுடன் நடக்க வேண்டும். வானம் நிழல் தருவது போல நிழலாக அன்பை பொழிய வேண்டும். வருங்காலத்தில் அவர்களைக் கொண்டே, நாம் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு நம் உதவி தேவைப்பட்டால் தாராளமாக செய்ய வேண்டும். மனச்சோர்வு ஏற்பட்டால் அதை போக்கி உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தாங்க முடியாத சுமையாக இருந்தால் நம்மை வெறுப்பார்கள். நம் அருகில் வரக் கூட விரும்ப மாட்டார்கள்” என்றார். இதைக் கேட்டு மனம் தெளிந்தார் முஆவியா. தன் மகன் யஜீதுவிடம் முன்பைவிட அன்பு செலுத்தினார்.விட்டுக் கொடுக்கும் போது தான் மனித உறவுகள் பலப்படுகின்றன.