அட்சய திருதியை: அட்சயபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர்: விளங்குளம் கிராமத்தில் உள்ள அட்சயபுரீஸ்வரர் கோயிலில் இன்று (7ம் தேதி) செவ்வாய்க்கிழமை அட்சய திருதியை பெருந்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
யமதர்மராஜனால் காலடிபட்டு ஊனம் அடைந்த சனீஸ்வரர் சாப விமோசனம் தேடி அட்சயபாத்திரத்தை கொண்டு வழியெங்கும் அன்னதானம் செய்துவந்து, விளாமரங்கள் சூழ்ந்த இந்த ஊருக்கு வரும்போது விளாமர வேர் தடுக்கி விழுந்ததில் பூசஞானவாவிசுரந்து கால் ஊனம் நீங்கி இறைவனால் திருமண பிராப்தி பெற்றும் காகவாகனம் பெற்றும் சாபவிமோசனம் பெற்றார். ஸ்ரீமந்தா தேவி, ஸ்ரீஜேஸ்டா தேவி சமேதராக இங்கு திருமணக் கோலத்தில் மங்கள சனீஸ்வரராக அமர்ந்து அருள் பாலித்து வருகிறார். இந்த அற்புதம் நிகழ்ந்தது பூசம் நட்சத்திரம், சனிக்கிழமை மற்றும் அட்சயதிருதியை சேர்ந்த முக்கூட்டு நாளில் தான் என்பது வரலாறு.
இன்று அட்சய திருதியை முன்னிட்டு, சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.