பாப்பிரெட்டிப்பட்டி கல்யாண ராமர் கோவிலை சீரமைக்க கோரிக்கை
பாப்பிரெட்டிப்பட்டி: தென்கரைகோட்டை கல்யாண ராமர் கோவிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரை கோட்டையில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கல்யாண ராமர் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கு முன், நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலில், ராமர், சீதை மணக் கோலத்தில் இருப்பது சிறப்பு அம்சமாகும். ராமருக்கு பட்டாபிஷேகம் நடந்த நிகழ்வில், உடனிருந்த வசிஷ்ட முனிவர், வாலி, சுக்ரிவன், லட்சுமணன், பரதன் உள்ளிட்ட பனிரெண்டு பேரும் ராமர், சீதையை சுற்றி இருப்பது போன்ற சுவாமி சிலைகள் இங்குள்ளன. இது போன்று வேறு எந்த கோவிலிலும் இல்லை. இக்கோவிலில், 28 கல் தூண்கள் உள்ளன.
இதில் சிங்கம் உள்ளிட்ட, வனவிலங்குகளுடன் பெண்கள் சண்டையிடுவது போன்ற சிற்பங் கள் உள்ளன. ஒவ்வொரு தூணையும் தட்டும் போது, ஒரு வித ஓசை வருகிறது.
திருமணமாகாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து வேண்டி கொண்டால், மூன்று மாதங்களில் திருமணம் நடந்து விடும் என்பது ஐதீகமாக உள்ளது. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் இங்கு நடக்கிறது. மிகவும், பழமை வாய்ந்த இக்கோவிலின் கோபுரத்தில் தற்போது, செடி, கொடிகள் முளைத்துள்ளன. மேலும், கோவிலின் உட்புறம் சேதமடைந்துள்ளது. எனவே, கோவிலை சீரமைப்பதுடன், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, கோவிலை சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.