ராமாநுஜர் திருநட்சத்திர திருவிழா: ஆண்டாள் அலங்காரத்தில் தரிசனம்
பெ.நா.பாளையம்:ராமாநுஜர், பத்து நாள் திருநட்சத்திர திருவிழாவையொட்டி, அலங்கார பல்லக்கு வாகனத்தில், ஆண்டாள் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ எம்பெருமானார் தர்சன ஐக்கிய சபா சார்பில், ராமாநுஜர் திருநட்சத்திர திருவிழா கடந்த, 30ம் தேதி முதல் நடந்து வருகிறது. முதலில், மங்களகிரி வாகனத்தில் ஸ்ரீ ராமாநுஜர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சூரிய பிரபை வாகனத்தில், ராமாநுஜர் ராமராகவும், சந்திரபிரபை வாகனத்திலும், முத்துபந்தல், சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் அலங்கார பல்லக்கு,நேற்று சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.இன்று, விமானத்தில் புறப்பாடு, நாளை திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், விசேஷ ஆராதனை, ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் குதிரை தம்பிரான் பேரில் திருவீதியுலா, ஸ்ரீ ராமாநுஜர் புஷ்ப பல்லக்கில் திருவீதியுலா என தொடர்ந்து, விழா நடக்கிறது. விழாவையொட்டி, தினமும் மாலை திருவீதி பஜனையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.