சிவகாசியில் மழை வேண்டி சிவன் கோயிலில் யாகம்
சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம், பர்ஜன்ய சந்தி ஜெபம், ருத்ரா அபிஷேகம் நடந்தது.தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ளதையொட்டி வெயில் வாட்டி வதைக்கிறது. கண்மாய், ஊரணி, கிணறு போன்ற எந்த நீர் நிலைகளிலும் தண்ணீர் இல்லை.மனிதர்கள் மட்டுமல்லாது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் அவதிப்படுகின்றன. கோடை மழையை நம்பி சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. மழை இல்லாமல் பயிர்கள் அழிந்து விடும் நிலையில் உள்ளது.இதை தொடர்ந்து சிவகாசி சிவன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம், நந்தி பெருமானுக்கு, பர்ஜன்ய சாந்தி ஜபம், சிவபெருமானுக்கு ருத்ரா அபிஷேகம் நடந்தது. நந்தி பெருமான் முன்பாக யாகம் வளர்த்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.சுப்பிரமணியன் பட்டர் யாகம் நடத்தினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தக்கார் உதவி ஆணையர் ஹரிஹரன், கோயில் செயல் அலுவலர் சுமதி கலந்து கொண்டனர்.*அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்க நாதர் கோயிலில் மழை வேண்டி வர்ண ஜபம் நடந்தது. கணபதி ஹோமம், புண்யாகவசனம், வர்ண மூல மந்திரம், வர்ண பாராயணம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் மற்றும் வருண ஜபம் நடந்தது.இதை முன்னிட்டு நேற்று (மே., 9ல்) காலை 8:30 மணிக்கு கோயிலில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை, வருணஜபத்தை கோயில் அர்ச்சகர் பாஸ்கரன் செய்தார்.ஓதுவார் பழனிசாமி பதிகம் பாடினார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுந்தரராஜன், கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.