உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கமலக்கன்னியம்மன் திருத்தேர் விழா

செஞ்சி கமலக்கன்னியம்மன் திருத்தேர் விழா

செஞ்சி: செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். செஞ்சிக்கோட்டை ராஜகிரி மலை மீது பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அன்று மாலை கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினமும் பூங்கரகம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. 9ம் நாள் விழாவாக நேற்று காலை மாரியம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது. பகல் 12:00 மணிக்கு ராஜகிரி கோட்டை காளியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடும், திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. 2:00 மணிக்கு ராஜகிரி கோட்டை பிரதான வாயிலிலும், பீரங்கிமேடு மந்தை வெளியிலும் பாரம்பரிய முறைப்படி எறுமை கிடா பலி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து 41 அடி உயர தேரில் மாரியம்மன், கமலக்கன்னியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் திரிசூலத்தை ஏற்றி, சிறப்பு பூஜை செய்து மாலை 3:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் துவங்கியது. திருவள்ளுவர் தெரு, திருவண்ணாமலை ரோடு, விழுப்புரம் ரோடு, சந்திரத்தெரு வழியாக தேர் பவனி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். தானியம், காய்கறி, நாணயம் ஆகியவற்றை நேர்த்தி கடனாக தேரின் மீது வீசினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !