உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி அன்னதான கூடங்களை திறக்க தொழிலாளர்கள் ‘ஸ்டிரைக்’

சதுரகிரி அன்னதான கூடங்களை திறக்க தொழிலாளர்கள் ‘ஸ்டிரைக்’

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மூடப்பட்டுள்ள தனியார் அன்னதான கூடங்களை திறக்க கோரி சுமை துாக்கும் தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்  கோயிலுக்கு  பூஜை பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சதுரகிரி கோயிலுக்கு  அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோயில் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் அன்னதான கூடம் மூடப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.  

கோயில் மற்றும் கடைகளுக்கு  தேவையான  பொருட்கள் சுமைதுாக்கும் தொழிலாளர்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.  அன்னதான கூடம் மூடப்பட்டுள்ளதால் உணவு பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டுள்ளதாக கூறி  சுமைதுாக்கும் தொழிலாளர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில்  போராட்டத்தால் கோயிலுக்கு பூஜை செய்யும் பூஜை பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் கோயில் நிர்வாகம் தவித்து வருகிறது.  மேலும் கடை உரிமையாளர்களும் பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கபட்டுள்ளனர். இதன் காரணமாக பவுர்ணமி பூஜைக்காக  இன்று முதல் மலைக்கு செல்லும் பக்தர்கள் உணவு, தண்ணீருக்காக   மேலும் சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க அறநிலையத்துறை  விரைந்து நடவடிக்கை எடுக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !