கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கல்யாண உற்சவம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், 35வது ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 35வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 11ல் துவங்கியது. 12 காலை, 6:00 மணிக்கு கலச ஸ்தாபனம், 9:00 மணிக்கு நகர்வலம், இரவு அன்னபட்சி வாகனத்தில் திருவீதி
உலாவும் நடந்தது. 13 இரவு சிம்ம வாகன உலா, 14ல் ஆஞ்சநேயர் வாகன உலா, 15ல் சேஷ வாகன உலாவும் நடந்தது. நேற்று (மே., 16ல்) காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், பிரகார உற்சவமும் நடந்தது. 11:30 மணிக்கு, நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
பின்னர் சுவாமியை பல்லக்கில் வைத்து கோவிலை சுற்றி ஊர்வலமாக அழைத்து சென்றனர். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு யானை வாகனத்தில் லட்சுமி நரசிம்மர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆலய கமிட்டியினர் செய்துள்ளனர்.