ராஜபாளையம் ராதா, சீதா கல்யாண உற்ஸவம்
ராஜபாளையம் : ராஜபாளையம் பெரிய சுரைக்காய்பட்டி நாயுடு தெரு வேணுகான பஜனா லயம் சார்பில் ஸ்ரீ ராதே கிருஷ்ண மகாலில் ராதா கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் (மே., 18ல்) காலை 8:00 மணிக்கு தொடங்கி மங்கள இசையுடன் சுவாமிக்கு மகாபிஷேகம், அஷ்டபதி பஜனை, திவ்ய நாம பஜனைகள் நடந்தன. சிறப்பு நிகழ்ச்சியாக ராதா கல்யாணம் நேற்று (மே., 19ல்) காலை தொடங்கி பக்தர்கள் சார்பில் சீர் வரிசையுடன் பகல் 12:00 மணிக்கு ராதா-கிருஷ்ணர் கல்யாணம் நாராயண கோஷத்துடன் நிகழ்ந்தது.
சேரன்மாதேவி பாலவெங்கட கிருஷ்ணன் பாகவதர் குழுவினர் தலைமையேற்று நடத்தினர். அன்னதானம் நடந்தது. குழந்தைகள் கிருஷ்ணர் ராதா வேடமிட்டு ஆடிப்பாடினர். மாலை ஸ்ரீ வேணுகான மாதர் சங்கத்தினரின் கோலாட்டம், இரவு ராதா கிருஷ்ண சுவாமி வீதி உலா வந்தனர்.
* ராஜபாளையம் வடக்கு சம்மந்தபுரம் அக்ரஹாரம் பகுதியில் 55 வது ஆண்டு ஸ்ரீராம நவமி உத்ஸவத்தை முன்னிட்டு சீதா கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு வாழை, மா தோரணங்கள் அலங்கரிக்கப்பட்டு மேடையில் ராமர் சீதா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மாப்பிள்ளை பெண் வீட்டார் சார்பில் சீர் கொண்டு வரும் நிகழ்ச்சியை அடுத்து சங்கல்பம், ஹோமம் செய்யப்பட்டது. பக்தர்கள் சூழ திருமாங்கல்யம் சீதா தேவிக்கு அணிவிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம், இனிப்புகள் வழங்கப்பட்டது.