மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கர தீவட்டி பவனி!
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசித் திருவிழாவில், கர தீவட்டி பவனி நடந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலுக்கு, கேரள பெண்கள் இருமுடிக் கட்டுடன் வந்து வழிபடுவதால், பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு, மாசி பெருந்திருவிழா, கடந்த நான்காம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன், வெள்ளிப் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மணவாளக்குறிச்சி, மணல் ஆலை உள்ளிட்ட, பல்வேறு ஊர்களில் இருந்து, அம்மனுக்கு, யானை மீது களபம் எடுத்து வரப்பட்டது. ஒன்பதாம் நாள் இரவு, அத்தாழ பூஜைக்குப் பின், வெள்ளிப் பல்லக்கில், அம்மன் எழுந்தருளினார். 41 தீபங்கள், இரண்டு வளையங்களில் ஏற்றப்பட்டு, தேர் போன்ற வாகனத்தில் இழுத்து வரப்பட்டன. கோவிலை சுற்றி நான்கு தெருக்களில் வலம் வந்த பின், பவனி நிறைவு பெற்றது.