கோவில் கோபுரத்தில் செடிகள்: பராமரிக்க மக்கள் கோரிக்கை
உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவில் கோபுரம் பராமரிப்பின்றி இருப்பதால், மரக்கன்றுகள் படர்ந்துள்ளன. உடுமலையில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரசன்ன விநாயகர் கோவிலும் ஒன்று.
இங்குள்ள விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாத சுவாமி, சவுரிராஜ பெருமாள், ஆஞ்சநேயர், பிரசன்ன விநாயகர், சுப்ரமணியசுவாமிகள், நடராஜர், தட்சிணா மூர்த்தி சுவாமிகளை பக்தர்கள் வழிபடுகின்றனர். கிருத்திகை, பிரதோஷம், ஏகாதசி என விசேஷ நாட்களில் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மேலும், உடுமலை சுற்றுப்பகுதி மக்கள், திருமணம், நிச்சயம், குழந்தைகளுக்கான மங்கல விழாக்களையும் இக்கோவிலில் நடத்துகின்றனர்.விசேஷ நாட்களில், இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இவ்வாறு உடுமலையில் பிரசித்தி பெற்ற கோவிலில், கோபுரம் பராமரிப்பின்றி இருப்பதால், செடிகள் முளைத்தும், மரக்கன்றுகள் படர்ந்தும் உள்ளன.இதனை அகற்றாமல் விடுவதால், மேலும் படரும் நிலை உள்ளது. கோவில் நிர்வாகத்தினர், உடனடியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள்எதிர்பார்க்கின்றனர்.