திருப்பூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளாட்சி ஏற்பு வழிபாட்டு பெருவிழா
திருப்பூர்:திருப்பூர், கணியாம்பூண்டியில், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளாட்சி ஏற்பு வழிபாட்டுப் பெருவிழா, வரும் ஜூன் 2ம் தேதி நடைபெற உள்ளது.பேரூர் ஆதீனமாக சாந்தலிங்க மருதாசல அடிகளார், கடந்த ஆண்டு செப்., மாதம் அருளாட்சி ஏற்றார். அவரது அருளாட்சி ஏற்பு வழிபாட்டுப்பெருவிழா, திருப்பூர் அருகே கணியாம்பூண்டியில் உள்ள எஸ்.கே.எம்., மஹாலில் வரும் ஜூன் 2ல், மாலை 4:20 மணிக்கு நடக்கிறது.
திருப்பூர் தொழில் அமைப்புகளின் ஆதரவுடன், வனம் இந்தியா பவுண்டேஷன், மனவளக் கலை ஆன்மிகக் கல்வி மையம் ஆகியன இணைந்து, இந்த விழாவை நடத்துகின்றன.ஜூன் 2 காலை, 5:00 மணிக்கு, உலக நலம் மற்றும் மழை வேண்டி வேள்வி நடக்கிறது. காலை 10:00 மணிக்கு, சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரியின் பாரம்பரிய கலை போற்றும் தமிழ் மணம் விருதுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில், கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழு நிறுவனர் கனகராஜ், பல்லவராயன்பாளையம் சிவசக்தி கலைக்குழு ஆசிரியர் ராமசாமி, அம்மன் கலைக்குழு ஆசிரியர் நஞ்சுக்குட்டி, சிங்கை வள்ளி கும்மியாசிரியர் பெரியசாமி. பவளக்கொடி கும்மியாட்டம் கலைக்குழு ஆசிரியர் விஸ்வநாதன், கோவை நவீன் பிரபஞ்ச நடனக்குழு ஆசிரியர் நவீன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மாலை, 4:20 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. சிறுதுளி அமைப்பு நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் குத்துவிளக்கேற்றுகிறார். வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் சுந்தரராஜ் வரவேற்கிறார். வாவிபாளையம் ஆனந்தகிருஷ்ணன் அறிமுக உரையாற்றுகிறார். திருப்பூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்களின் கூட்டமைப்பு தலைவர் முரளிதரன், தவம் நிகழ்த்துகிறார்.அதன்பின், நூல் வெளியீட்டு விழா நடக்கிறது.
மனு நீதி அறக்கட்டளை தலைவர் மனுநீதி மாணிக்கம் வெளியிட, உலக சமுதாய சேவா சங்கத் துணைத்தலைவர் ஆறுமுகம் பெற்றுக்கொள்கிறார். தொடர்ந்து, பேரூராதீனம் - ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் குறும்படம் வெளியிடப்படுகிறது.இதை, கரிய காளியம்மன் மகால் நிர்வாக அறங்காவலர் பரணி நடராஜன் வெளியிட, உலக சமுதாய சேவா சங்க துணைத்தலைர் ராம்ராஜ் நாகராஜன் பெற்றுக்கொள்கிறார். வரன்பாளையம் திருநாவுக்கரசர் திருமடம் மவுன சிவாச்சல அடிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்துசிவராமசாமி அடிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர அடிகள், அவிநாசி வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் முன்னிலை வகிக்கிறார். உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் மயிலானந்தன் தலைமை தாங்குகிறார்.
குமரகுருபர அடிகள், மனுநீதி மாணிக்கம் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். அதன்பின், சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளாசி வழங்குகிறார். சாந்தலிங்கர் மருத்துவமனை அறக்கட்டளை அறங்காவலர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், பேரூர் மடத்தின் எதிர்காலத் திட்டம் குறித்து விளக்கவுரை ஆற்றுகிறார்.கம்பன் கழகச் செயலாளர் ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் நன்றி கூறுகிறார். நிகழ்ச்சியில் தொழில்துறை நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.