தினமலர் செய்தி எதிரொலி: ராஜகோபுரத்தில் முளைத்த செடிகள் அகற்றம்
உடுமலை:தினமலர் செய்தி எதிரொலியாக, பிரசன்ன விநாயகர் கோவில் ராஜகோபுரத்திலிருந்த செடிகள் அகற்றப்பட்டன.அறநிலையத்துறை நிர்வாகத்திலுள்ள, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாத சுவாமி, சவுரிராஜ பெருமாள், ஆஞ்சநேயர், பிரசன்ன விநாயகர், சுப்ரமணிய சுவாமி, நடராஜர், தட்சிணா மூர்த்தி சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி வருகின்றனர்.
பக்தர்கள் அதிகளவு வந்து செல்லும் பிரசித்த பெற்ற இக்கோவிலில், ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. இக்கோபும், சுவாமிகளின் சிற்பங்கள் அற்புதமான சுதை வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.கோவில் ராஜகோபுரத்தில், பல இடங்களில், செடிகள் முளைத்து, கோபுரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், பல்வேறு மரங்கள் ஒன்றரை அடி உயரம் வரை வளர்ந்திருந்தன. இது குறித்து தினமலர் நாளிதழில், நேற்றுமுன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து, அறநிலையத்துறை சார்பில், கோபுரத்திலுள்ள செடிகள் நேற்று அகற்றப்பட்டது.கோபுரங்களிலுள்ள செடிகளை, பாதுகாப்பாக முற்றிலும் அகற்றி, மீண்டும் வளராமல் தடுக்கும் வகையில், மயிலாடுதுறை அருகிலுள்ள மாயவரத்தை சேர்ந்த குழுவினர் வந்திருந்தனர்.செடிகளை முழுமையாக அகற்றி, மருந்து வைத்து அழித்தனர். மேலும், கோபுரத்தை சுற்றிலும், செடிகள் முளைக்காமல் இருக்க முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டது.