கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் விழா
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கம்பம் ஆற்றில் விடுதல் இன்று மாலை நடக்கிறது.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, கடந்த, 12ல் கம்பம் நடுதலுடன் துவங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல், காப்புக் கட்டு, மஹாசண்டி யாகம், மறுகாப்பு கட்டு, தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தன. திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல் போன்றவை நடந்தன. அலகு குத்தி, அக்னிச் சட்டி ஏந்தி ஏராளமானோர் நேர்த்திக் கடன் செலுத்தினர். இரண்டாவது நாளான நேற்று காலையிலேயே, அலகு குத்தி வருதல் துவங்கிவிட்டது. அமராவதி ஆற்றில் இருந்து, பலர் பறவை அலகு குத்திக் கொண்டு பொக்லைன் இயந்திரத்தில் தொங்கியபடி, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அக்னிச்சட்டி எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பத்தை அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி, இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. அதை தொடர்ந்து, ஆற்றில் பல்வேறு அமைப்புகள் சார்பில், பிரமாண்டமான வாண வேடிக்கை நடக்கிறது. திருவிழாவுக்கு வரும் பக்தர்கள், திருவள்ளுவர் மைதானம், ரயில்வே ஸ்டஷேன், பசுபதீஸ்வரர் கோவில் பகுதிகளில், வாகனங்களை நிறுத்த வேண்டும் என, மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.