பெரியநாயக்கன்பாளையம் மகா மாரியம்மனுக்கு திருக்கல்யாணம்
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ.கவுண்டம்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி, கடந்த, 31ம் தேதி மகாகணபதி ஹோமம், தீபாராதனை, பிரசாத வினியோகம் நடந்தது.
நேற்று முன்தினம் (ஜூன்., 2ல்), காலை, 6.00 மணி முதல், பகல், 12.00 மணி வரை முளைப்பாரி, பால்குடம், அக்னிசட்டி கோவிலுக்கு எடுத்து வருதல், அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட வைகள் நடந்தன. மாலை, 6.00 மணிக்கு மகாமாரியம்மனுக்கு உபசார பூஜைகள், அர்ச்சனை நடந்தது.நேற்று (ஜூன்., 3ல்) காலை, 5.00 மணிக்கு சக்தி கரகம் அழைத்து வருதல், சக்தி அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை, 9.00 மணிக்கு மகாமாரியம்மன் உற்சவருக்கும், சிவ பெருமானுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
நிறைவில், பெண்களுக்கு திருமாங்கல்யசரடு, பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டன. மதியம் அன்னதானமும், மாலை மாவிளக்கு நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், பால்ராஜ், முருகேசன் ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.