கிருஷ்ணகிரி வனதேவதை திருவிழாவில் மக்கள் பாரம்பரிய நடனம்
கிருஷ்ணகிரி: பெரியமலை வனப்பகுதியில் உள்ள வனதேவதை திருவிழாவில், நேற்று (ஜூன்., 3ல்) இருளர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே பெரியமலை வனப்பகுதியில், இருளர் இன மக்கள் வழிபடும் வனதேவதை, வனமுனி அய்யனார் கோவில் வன தேவதை திருவிழா கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனை தாய் வீட்டுக்கு அனுப்பும் நிகழ்ச்சி ஜவுக்குப்பள்ளம் இருளர் காலனியில் துவங்கி, 18 கிராமங்களை கடந்து கொல்லப்பள்ளி பெரியமலைக்கு அம்மன் ஊர்வலம் வந்தது. பின்னர் வனத்துக்கு சென்று, வழிபாட்டுக்கு தேவையான தேன், கிழங்கு, தினை மற்றும் பூக்களை சேகரித்தனர். நேற்று (ஜூன்., 3ல்), கோவில் பூசாரி, வனமுனி அய்யனார் கோவிலில் இருந்து வனதேவதை கோவிலுக்கு கரகம் எடுத்து, ஆணிகளால் ஆன காலணி அணிந்து சென்றார்.
அப்போது, வழியில் படுத்திருந்த ஆண்கள், பெண்கள் மீது, பூசாரி நடந்து சென்றார். வனப்பகுதி யில் சேகரிக்கப்பட்ட தேன், கிழங்கு மற்றும் பூக்களை கொண்டு பூஜை நடத்தினர்.
மாவிளக்கை ஊர்வலமாக எடுத்துச்சென்று வனதேவதை அம்மனை வழிபட்டனர். வனதேவதைக்கு பூக்களால் அலங்காரம் செய்து, வள்ளிக்கிழங்கில் தீபம் ஏற்றினர். அப்போது, 20க்கும் மேற்பட்ட ஆடுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகளும் பலியிடப்பட்டன.
தங்களது பாரம்பரிய இசையுடன் நடனமாடி வனதேவதையை வழிபட்டனர். விழாவில், கிருஷ்ணகிரி, வேலூர்,திருவண்ணா மலை, பொள்ளாச்சி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங் களிலிருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் பங்கேற்றனர். இதில், பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.