உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்திரன் தந்த சீதனம்!

இந்திரன் தந்த சீதனம்!

ஆறுமுகனின் அறுபடைத் தலங்களில் ஒன்று திருத்தணிகை. "திருத்தணிகை மலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ..

தணிகை மலை இருக்கும் திசை நோக்கித் தொழுதாலோ...
தணிகையை நோக்கி பத்தடி தூரம் சென்றாலோ... நோய்நொடிகள் நீங்கும் என்கிறது தணிகை புராணம்.

திருத்தணிகையில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து, என திருவடிகளை தியானித்து வழிபடுபவர்கள் வீடு பேறு பெறுவர் என்று முருகப் பெருமான் திருத்தணி மலையின் மகிமையை வள்ளிக் குறத்தியிடம் விவரித்ததாக கந்த புராணத்தில் குறிப்பிடுகிறார் கச்சியப்ப சிவாசார்யார். அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர். இங்கு மயிலுக்குப் பதிலாக இந்த ஐராவத யானையே முருகப் பெருமானின் வாகனமாகத் திகழ்வது சிறப்பு. இந்திரன் தன் மகளுக்குச் சீதனமாக ஐராவதம் யானையை வழங்கினான். இதனால் இந்திரனின் செல்வம் குறைய ஆரம்பித்தது. எனவே, அவன் தனது குறை தீர தணிகை வேலனை வழிபட்டான். முருகப் பெருமான் அவனிடம், ஐராவதத்தை திரும்ப அழைத்துச் செல்லுமாறு கூறினார். அதை ஏற்க மறுத்த இந்திரன், ஐராவதம் எப்போதும் தேவலோகத்தை பார்த்தவாறு நின்றால் போதும்! என வேண்டினான். அதன்படியே இந்த ஐராவதம் கிழக்கு நோக்கி-தேவலோகத்தைப் பார்த்தபடி நிற்பதாக ஐதீகம்.

நந்திதேவர் இங்குள்ள முருகப் பெருமானை வழிபட்டு, பதி -பசு- பாசம் ஆகிய முப்பொருள் இயல்பைக் கூறும் சைவ சித்தாந்த உபதேசம் பெற்றார். இதற்காக முருகப் பெருமான் வரவழைத்த, "சிவதத்துவ அமிர்தம் எனும் நதி "நந்தி ஆறு என்றும், நந்திதேவர் தவம் செய்த குகை நந்தி குகை என்றும் வழங்கப்படுகின்றன. தணிகை மலையின் தென்கிழக்குத் திசையில் சப்த ரிஷிகள், தணிகை முருகனை பூஜித்த இடம் உள்ளது. இங்கு அவர்கள் அமைத்த ஏழு சுனைகள் மற்றும் கன்னியர் கோயில் ஆகியன உள்ளன.
இந்திரன் அளித்த மற்றொரு சீதனப் பொருள். பெரிய சந்தனக் கல். இந்தக் கல்லில் அரைக்கப்படும் சந்தனமே சுவாமிக்கு சார்த்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சர்வரோக நிவாரணியான இந்த பிரசாதத்தை "ஸ்ரீபாதரேணு என்கிறார்கள். நெடுங்காலமாக சந்தனம் அரைக்கப்பட்டு வந்தாலும் இந்த சந்தனக் கல் சிறிதும் தேய்மானம் அடையாமல் உள்ளது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !