சுரங்கப்பாதை கோயில்!
புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார் கோயிலில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு மலையை குடைந்து கட்டப்பட்டது. உமையாம்பிகை சமேத பர்வதகிரீஸ்வரர் திருக்கோயில். திருச்சி, தஞ்சாவூர் புதுக்கோட்டை மக்களின் வழிபாட்டுக்குரிய திருத்தலமாகத் திகழ்கிறது. இந்தக் கோயில், கருவறையில் அருளும் பர்வதகிரீஸ்வரர் எட்டு பட்டைகள் கொண்ட சிவலிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார்.
விநாயகப் பெருமானுக்கு எதிரில் தெற்கு நோக்கி மங்கல நாயகியாக அருள்பாலிக்கும் உமையாம்பிகை தனது தோழியுடன் காட்சி தருகிறார். அம்பிகையை தரிசிக்க வரும் பக்தர்கள் மஞ்சளால் அபிஷேகம் செய்கிறார்கள். கோயிலின் தென்மேற்கில் மஹாவிஷ்ணு, வரதராஜப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறார். இந்தக் கோயிலின் மலை உச்சியில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்து வருகிறார்.
அர்த்த மண்டபம், மகா மண்டபம், தென்புறத்தில் நூற்றுக்கால் மண்டபம் என கோயில் அழகுற அமைத்திருப்பது காண வரும் பக்தர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நூற்றுக்கால் மண்டபம் ராஜ தர்பார் வடிவில் ஒரே கல்லால் ஆன அச்சும், சக்கரமும் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் சுமார் மூவாயிரம் பேர் அமர்ந்து பெருமானை தரிசிக்கும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோயிலில், "ஆவி என்ற சுரங்கப்பாதை உள்ளது. அதன் நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அதன் கீழ்தளம் கற்களால் மூடப்பட்டுள்ளது. அதை திறந்து பார்த்தால் உள்ளே குகை பாதை செல்கிறது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் அங்குள்ள மூன்று கோபுரங்களின் நிழல்களும் இந்த சுரங்கப்பாதையில் தெரியும் என்று கோயில் குருக்களும், பக்தர்களும் கூறுகின்றனர்.!