உச்சிப்புளி அருகே ராமகிருஷ்ண மடத்தில் புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே நாகாச்சியில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தில் சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கான கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டும் பூஜையில் கொல்கத்தா பேலூர் ராமகிருஷ்ண மடம் துணைத் தலைவர் சுவாமி கவுதமாநந்தர் பங்கேற்றார்.
அடிக்கல்லை பூஜை செய்து வழங்கிய சுவாமி கவுதமாநந்தர், பின் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார். அவர் பேசியதாவது:தர்மம் தள்ளாடிய காலத்தில் மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றினார். அவர் தர்மவழியில் வாழ்ந்து மக்களையும் அவ்வழியே நடக்க வைத்தார். தர்மத்தை காத்தவர்களாக ராமகிருஷ்ண பரமஹம்சரும், அவரது சீடரான சுவாமி விவேகானந்தரும் திகழ்ந்தனர். அதனாலே காலங்கடந்தும் மக்களால் நினைவு கூறப்
படுகின்றனர்.
தர்மத்தின் வழி நடப்பவர்களை மக்கள் என்றுமே கொண்டாடுவார்கள். ராமகிருஷ்ண மடத்திற்கு வரும் மக்கள் தர்மத்தின் வழி பின் செல்பவர்களாகவே விளங்குவர். நாம் ஒரு
கருத்தை எடுத்துக் கொண்டு அதை அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுவோமேயானால் நிச்சயம் வெற்றி கிட்டும்.முயற்சி உடையவர் ஒரு நாள் லட்சியத்தை அடைவர் என்பதே
சுவாமி விவேகானந்தரின் வாக்கு, என்றார்.
ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுதபானந்தர், கொல்கத்தா பேலுர் ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி சுகாத்மானந்தர், சென்னை தி.நகர் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி பத்மஸ்தானந்தர் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்டோர்
திரளாக கலந்துகொண்டனர்.