உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீளாத் துயரில்... மதுரை மாரியம்மன் தெப்பம்

மீளாத் துயரில்... மதுரை மாரியம்மன் தெப்பம்

மதுரை : தமிழகத்தில் ஆன்மிக சிறப்பும், வரலாற்று தொன்மையும் வாய்ந்த தெப்பக்குளங் களில் முதன்மையானது மதுரை மாரியம்மன் தெப்பம். மதுரையின் அடையாளமும்கூட.
ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று நடக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத் திருவிழா இங்குதான் அரங்கேறுகிறது.

மங்கும் தெப்பத்தின் மகிமை: இத்தெப்பக்குளம் 1645ம் ஆண்டில் திருமலை நாயக்கர் மன்னரால் அமைக்கப்பட்டது. அந்த காலத்தில் வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளத்துக்கு நேரடியாக தண்ணீர் கொண்டு செல்ல பனையூர் கால்வாய் பயன்படுத்தப்பட்டது. இக்கால்வாய் வைகை நதியில் ஏ.வி., பாலம் அருகே துவங்குகிறது.

அங்கிருந்து தானாகவே கால்வாய் மூலம் தெப்பக்குளத்துக்கும் தண்ணீர் சென்றது.அப்போது எல்லாம் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால், மாரியம்மன் தெப்பக்குளம் ஆண்டு முழுவதும் நிரம்பியே காட்சி அளித்தது. சுற்றுவட்டாரப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் காப்பாற்றப்பட்டது.காலப்போக்கில் நிலைமை தலைகீழானது.

மழைப்பொழிவு குறைவு, வைகையின் பிறப்பிடத்தில் அரங்கேறும் வனப்படுகொலை போன்றவை ஆற்றின் நீரோட்டத்தை அடியோடு நிறுத்திவிட்டது. இப்போது வைகையில் தண்ணீர் ஓடினாலே பெரிய விஷயமாகவும், அதிசயமாகவும் பார்க்கப்படுகிறது. ஆறு வறண்டதால் தெப்பக்குளமும் வெறுமையானது. பல ஆண்டுகளாகவே தெப்பக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதை காண்பது அரிதாக உள்ளது. தற்போது ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாகவும், மக்களின் இரவு நேரப் பூங்காவாகவும் மாறிவிட்டது.

தமிழகத்தின் கோயில் தெப்பக்குளங்களில் எப்போதும் தண்ணீர் இருக்கும் நிலையில், பழம்பெருமை வாய்ந்த மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் எப்போதும் வற்றியே இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

தொன்மை வாய்ந்த தெப்பக்குளத்தின் மகிமை மெல்ல மங்கி வருகிறது. காப்பாற்றப்படுமா ஆண்டு தோறும் நடக்கும் தெப்பத்திருவிழாவுக்காக மட்டுமே தற்போது தண்ணீர் நிரப்பப் படுகிறது. இதற்காக வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் பம்ப் செய்து கொண்டு வருகின்றனர். கடந்த ஜன.,ல் தண்ணீர் நிரப்பப்பட்டு, தெப்பத்திருவிழா நடந்தது. அதன்பிறகு ஒரு மாதத்திலேயே தெப்பம் வறண்டது. ஆண்டு முழுவதும் அதில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுரைவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.பல ஊர்களில் ஆண்டு முழுவதும் கோயில் தெப்பக்குளங்களில் தண்ணீர் இருக்கும்படி பல வழிமுறைகளை கையாண்டு பாதுகாத்து வருகின்றனர்.

அதுபோல் மதுரையிலும் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறையினர் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான நிதியை அரசிடம் வலியுறுத்தி பெற
வேண்டும். அப்போதுதான் மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மாரியம்மன் தெப்பக்குளத்தை மீளாத் துயரில் இருந்து காப்பாற்ற முடியும்.சிக்கல் ஏன்மாநகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது: குடிநீருக்கே பற்றாக்குறை நீடிப்பதால், வைகை ஆற்றின் படுகையில் இருந்து தண்ணீர் எடுத்து சீரான இடைவெளியில் பம்ப் செய்து தெப்பத்தை நிரப்புவது கடினம். தற்போது முல்லைப் பெரியாறில் இருந்து 1020 கோடி ரூபாயில் குடிநீர் கொண்டுவரும் திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.

அத்திட்டம் வந்த பின் தேவையை விட கூடுதல் குடிநீர் கிடைத்தால், மாரியம்மன் தெப்பத்தை நிரப்ப வகை செய்யலாம். இது தவிர வைகையில் நீரோட்டம் இருக்கும்போது பழைய
காலம் போல மீண்டும் பனையூர் கால்வாய் மூலம் தெப்பத்தை நிரப்ப திட்டம் உள்ளது, என்றனர்.காணாமல் போன கால்வாய் மீட்க ரூ.95 லட்சத்தில் திட்டம்மாரியம்மன் தெப்பக்குளத்தை நிரப்ப உதவிய பனையூர் கால்வாய் காலப்போக்கில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சிதைந்தது. இக்கால்வாய் துவங்கும் வைகை கரைப்பகுதியில் முழுமையாக
அழிக்கப்பட்டுள்ளது. நூறு மீட்டருக்கு அக்கால்வாயை காணவில்லை. எஞ்சிய இடத்தில் தூர்ந்துள்ளது.

இக்கால்வாயை மீட்டு மீண்டும் வைகை நதியில் இருந்து நேரடியாக மாரியம்மன் தெப்பக்குளத்தை நிரப்ப பொதுப்பணித்துறை 95 லட்சம் ரூபாயில் திட்டம் தயாரித்துள்ளது. பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற் பொறியாளர் சுப்பிரமணி கூறியதாவது: எங்கள் திட்டத்துக்காக மாநகராட்சியிடம் நிதி கோரியுள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி கிடைக்கவில்லை.

வேறு நிதியாதாரத்தை அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர். நிதி கிடைத்ததும் கால்வாய் தூர் வாரப்படும். ஆற்றின் துவக்கத்தில் துண்டிக்கப்பட்ட 100 மீட்டர் கால்வாய்க்கு புத்துயிர் அளிக்கப்படும். அங்கு ஒரு மதகு வைத்து வைகையில் தண்ணீர் வரும்போது தெப்பக் குளத்துக்கு திறக்கப்படும்.வைகை அணை மறுகால் பாயும் நேரம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கைக்கு தண்ணீர் திறக்கப்படும் நேரங்களில் வைகையில் தண்ணீர் வரும். அப்போதெல்லாம் மாரியம்மன் தெப்பத்துக்கும் தண்ணீர் வழங்குவோம்.

இதன் மூலம் எப்போதும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் தெப்பத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள முடியும். முழுமையாக தெப்பம் வற்றுவது அரிதாகிவிடும். வரும்
தெப்பத்திருவிழாவுக்கு முன் திட்டப் பணிகளை முடித்து விடுவோம், என்றார்.இவ்வளவு கொள்ளளவாமாரியம்மன் தெப்பக்குளம் 305 மீட்டர் நீளம், 290 மீட்டர் அகலம், 12 அடி
உயரம் கொண்டது. இதில் 8 அடி உயரம் வரை தண்ணீர் நிரப்ப முடியும். தெப்பத்தின் கொள்ளளவு 8 மில்லியன் கன அடியாகும்.

முழுகொள்ளளவு நீர் நிரம்பி இருந்தால் அருகில் உள்ள அனுப்பானடி, ஐராவதநல்லூர் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !