உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம்: குழப்பத்தில் பக்தர்கள்

காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம்: குழப்பத்தில் பக்தர்கள்

காஞ்சிபுரம்:அத்தி வரதர் வைபவத்திற்கு வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், சுவாமி தரிசன கட்டணம் குறித்த தகவல் இல்லாததால், பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1ல், அத்தி வரதர் வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்து வருகிறது. எனினும், அத்தி வரதர் வைபவத்திற்கான அடிப்படை வசதிகள், அறநிலையத்துறை நிதியில் இருந்து செய்யப்படுகிறதா? தனியார் பங்களிப்பில் செய்யப்படுகிறதா என்பது குறித்த தகவல் இல்லை.தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கான நுழைவு கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட தகவல்களை, அறநிலையத் துறையோ, மாவட்ட நிர்வாகமோ, இதுவரை தெரிவிக்கவில்லை.ஆனால், அத்தி வரதரை தரிசிக்க, சிறப்பு கட்டணமாக, 500 ரூபாய் வசூல் செய்ய போவதாக, பக்தர்கள் இடையே தகவல் பரவுகிறது.இவ்வளவு பெரிய தொகை கொடுத்து, சுவாமியை தரிசனம் செய்ய முடியுமா என, எளிய குடும்பத்தினர் கவலையில் உள்ளனர்.சம்பந்தப்பட்ட நிர்வாகம், பக்தர்களுக்கு செய்யப்பட உள்ள வசதிகள், தரிசன கட்டணம் உள்ளிட்ட தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனி செயல் அலுவலர் நியமிக்கப்படுவாரா?

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர், தியாகராஜன், கடந்தாண்டு ஜூன், 28 முதல், கூடுதலாக நிர்வகிக்கிறார். வரதர் கோவில் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், மதுராந்தகம் ஏரிகாத்தராமர் கோவில் மற்றும் 40 சிறிய உபகோவில்களையும் கவனித்து வருகிறார்.இந்நிலையில், அத்தி வரதர் வைபவத்திற்கான அழைப்பிதழ் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து தகவல் அறிய கோவிலுக்கு சென்றால், செயல் அலுவலரை பார்க்க முடியவில்லை.அவர், கூடுதல் பொறுப்பு வகிக்கும், பிற கோவில் பணிகளுக்கு சென்றிருப்பதாக, அங்கிருப்போர் தெரிவிக்கின்றனர்.அத்தி வரதர் வைபவம் துவங்குவதற்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில், விழா பணிகளை துரிதப்படுத்த, வரதர் கோவிலுக்கு என, தனி செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !