மரக்காணத்தில் மகாவிஷ்ணு சிலை கண்டெடுப்பு
ADDED :2321 days ago
மரக்காணம்: மரக்காணத்தில், பூமியில் புதைந்திருந்த மகா விஷ்ணு கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் உள்ள தைலம்தோப்பு வழியாக, நேற்று மதியம் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் சென்றனர். அங்கு, மண்ணுக்கு மேல், சிறிய கற்சிலை தெரிவதைக் கண்டு, அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தனர். உடன் பொதுமக்கள், சிலையை தோண்டி எடுத்தனர். அது, கருங்கல்லால் ஆன, 4 அடி உயரம் உள்ள, நான்கு கைகளுடன் கூடிய மகா விஷ்ணு சிலை என தெரியவந்தது. சிலை கிடைத்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, சிலைக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். பின், அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிலையை, பாதுகாப்பாக வைத்தனர்.